டெல்டா மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து


டெல்டா மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து: புதிய பாதையால் கூடுதல் பயன் கிடைக்கும

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம் பாடி, காரைக்கால், திருநள்ளார், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வழியாக, திருத்துறைப்பூண்டியை புதிய ரயில் பாதை மூலம் இணைத்தால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்படும். இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகமான வருவாய் கிடைக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



உப்பு, நெல் உள்ளிட்ட பொருட்கள், எண்ணெய், நிலவாயு உள்ளிட்டவைகள் காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற கடற்கரையில் முடியும் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி 37 கி.மீட்டர் நீளமுடைய கிளை ரயில் பாதை உள்ளது. தற்போது, இந்த பாதையை பயன்படுத்தி மட்டுமே டெல்டா மாவட்ட பகுதிகளில் ஏராளமாக விளையும் நெல் மூட்டைகளையும், உப்பு மூட்டைகளையும் நாட்டின் பல பகுதிகளுக்கும் எடுத்து செல்லப்படுகின்றன.



காவிரி வடிநிலப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான நிலவாயு மற்றும் எண்ணை வளம் கண்டறியப்பட்டு, எண்ணெய் மற்றும் நில வாயுக்கமிஷன் (ஓ.என்.ஜி.சி) பல உற்பத்தி கூடங்களை துவக்கி உள்ளது. ஆனால், டெல்டா மாவட்டங்களின் கடற்கரையோர ரயில் பாதை பிரிவுகள் விரைவில் அகல ரயில் பாதையாக்கும் முயற்சி மேற் கொள்ளப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும், கால தாமதப்பட்டும் வருகிறது. இந்நிலையில், பல்வேறு இடங்களை புதிய தடத்தின் மூலம் இணைப்பதால், இப்பிரச்னைக்கு ரயில்வே நிர்வாகம் ஒரு தீர்வு காண முடியும். மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி ரயில் பாதை பிரிவுக்கு மாற்றாக மற்றொரு தடமும் ஏற்கனவே உள்ளது.



இத்தடத்தில் விடுபட்டுள்ள பகுதிகளில் ரயில் பாதைகளை அமைப்பதன் மூலம் மூன்று முக்கிய வழிப்பாட்டு தலங்களான திருநள்ளாறு-நாகூர்-வேளாங்கண்ணி ஆகியவற்றை குறைந்த தூரத்தில் இணைக்க முடியும். வழிபாடு, சுற்றுலா என அனைத்து வகையிலும், இந்த இணைப்பு ரயில்பாதை மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். ஆனால், அருமையான இந்த திட்டம் இதுவரை கவனத்தில் கொள்ளப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் லாபகரமாக செயல்படவில்லை எனக் காரணம் காட்டி மயிலாடுதுறை-தரங்கம்பாடி மற்றும் பேரளம்-காரைக் கால் கிளை பிரிவுகள் மூடப்பட்டன.



இது குறித்து, சமூக ஆர்வலரான நசிகேதன் என்பவர் கூறியதாவது: ஏற்கனவேயுள்ள மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி ரயில் பாதைக்கு மாற்று பாதையாக மயிலாடுதுறை- தரங்கம்பாடி-காரைக்கால்- நாகூர்- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி புதிய தடம் அமையும்.



இந்த தடத்தில் விடுபட்டுள்ள பகுதியில் மட்டும் புதியதாக இணைப்பு அகல ரயில் பாதை அமைப்பதன் மூலம் இந்த தடம் லாபகரமாக இயங்கும். போக்குவரத்து நிறுத்தப் பட்ட பேரளம்-காரைக் கால் மீட்டர்கேஜ் இணைப்பு ரயில் பாதை தடத்தை அகல ரயில் பாதையாக்குவதன் மூலம் மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் பிரிவின் இடைப் பட்ட பகுதி மக்களுக்கு திருநள்ளாறு மற்றும் நாகூர் செல்ல நேரிடை வசதி ஏற்படும்.



இணைப்பு ரயில் பாதை அமைக்க கோரப்படும் மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி புதிய மாற்று பாதையில் பிரிவு வாரியான விவரங்கள்: மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் போக்குவரத்து நிறுத்தப் பட்ட மேற்படி மீட்டர்கேஜ் பாதை தடத்தில் புதியதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.



தரங்கம்பாடி-காரைக்கால்-நாகூர் மிகச்சிறிய பகுதியான இந்த தடத்தில் மட்டுமே புதிய இணைப்பு ரயில் பாதை தரங்கம்பாடி-காரைக்கால் இடையே அமைக்க வேண்டும்.



நாகூர்-நாகப்பட்டினம் இந்த பிரிவில், ஏற்கனவே இருந்த மீட்டர்கேஜ் பாதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்துக்கு தயாராக உள்ளது. நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இந்த தடத்தில் துவக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.



வேளாங்கண்ணி-திருத்துறைப்பூண்டி தமிழக அரசின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக, தற்போது இத்தடத்தில் ஆரம்பக்கட்ட ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது விரைவில் முடிக்கப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு நசிகேதன் கூறியுள்ளார்.



இடியாப்ப சிக்கல்: தற்போது அகல ரயில் பாதைக்காகப் பிரிக்கப்பட்ட விழுப்புரம்-மயிலாடுதுறை மெயின் லைன் பிரிவில், கொள்ளிடம் பாலம் உள்ளிட்ட மூன்று பாலங்களை புதியதாக கட்டினால்தான் விழுப்புரம்-மயிலாடுதுறைக்கிடையே அகல ரயில்களை இயக்க முடியும். இந்த மூன்று பாலங்களும் அவ்வளவு வேகமாக கட்டி முடிக்க முடியாது. இதற்கு பதில், சிதம்பரம்-சீர்காழி பிரிவில், பணியை துவக்கியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். இதில் ரயில்வே நிர்வாகம் கவனக்குறைவாக இருந்துவிட்டது. விரைவில் போக்குவரத்து தொடங்கவுள்ள திருச்செந்தூர்-திருநெல்வேலி பிரிவில், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை தாமதிக்காமல், இம்மார்க்கத்தில் பணி நிறைவடையும் வரை விருத்தாசலம் வழியாக இயக்கலாம்.

Tags:

0 comments: